6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு!
உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய கார்களுக்கான குறைந்த தேவையால், ஆட்டம் கண்டுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்குறைப்பு செய்யப்படுமென கூறியுள்ளது.
பணிநீக்கம், முன்கூட்டியே ஓய்வு பெறுதல், தற்காலிக ஒப்பந்தங்களை புதுப்பிக்காதது மற்றும் காலியிடங்களை நிரப்பாதது ஆகியவற்றின் மூலம் ஆட்குறைப்பு அடையப்படும் என பி.எம்.டபிள்யூ நிர்வாகமும் அதன் பணிக்குழுவும் உறுதிசெய்துள்ளது.
இதுகுறித்து பி.எம்.டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பி.எம்.டபிள்யூ குழுமத்தை வெளிப்புற தாக்கங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மேலும் நெகிழ வைப்பதற்கு மேலதிக நடவடிக்கைகள் தேவை.
திட்டமிடல் மற்றும் தன்னார்வ ஒப்பந்தங்கள் மூலம் திட்டமிடப்பட்ட தொழிலாளர் குறைப்புகளை அடைவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தானியங்கி காரை உருவாக்குவதில் மேற்கொள்ளப்பட்ட வரும் ஆராய்ச்சிகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் புதிய கார் பதிவுகள் 2019ஆம் ஆண்டின் இதே மாதத்திலிருந்து மே மாதத்தில் 52 சதவீதத்துக்கும் மேலாக சரிந்தன. இது ஏப்ரல் மாதத்தில் 73 சதவீத வீழ்ச்சியிலிருந்து சற்று முன்னேற்றம் அடைந்தது.
பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.