Main Menu

49-வது பிறந்த நாள்: ராகுலுக்கு மோடி வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று (புதன் கிழமை) 48-வது வயது நிறைவு பெற்று 49-வது வயது பிறந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக அவர் தனது 49-வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடவில்லை.

என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று காலை ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். சோனியா, பிரியங்கா ஆகியோர் ராகுலுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாநில காங்கிரஸ் தலைவர்களும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பினார்கள். முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் இணைய தளம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.

இதனால் இன்று காலை சமூக வலைத்தளங்களில், “ஹேப்பி பெர்த்டே ராகுல் காந்தி” என்பது டிரெண்டிங் ஆக மாறியது.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ராகுல்காந்திக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து சேவை செய்ய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக “காவலாளியே திருடன்” என்று ராகுல் விமர்சித்தார். என்றாலும் அதை பெரிதுபடுத்தாத பிரதமர் மோடி அரசியல் நாகரீகத்தின்படி ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தலில் 19 மாநிலங்களில் முழுமையாக தோல்வியை தழுவியதால் விரக்தி அடைந்த ராகுல், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் இந்த முடிவில் தற்போது வரை மிகவும் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இதனால் காங்கிரஸ் நிர்வாகத்தில் நாளுக்கு நாள் குழப்பம் அதிகரித்தப்படி உள்ளது. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு ராகுலை சமரசம் செய்து விடலாம் என்று மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பகிரவும்...