Main Menu

40 வயதுக்காரருக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து உயிரை விட்ட முதியவர்

நாராயண் தபால்கரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் விடாப்பிடியாக வற்புறுத்தி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.

காடு வா வா என்று அழைக்கும் வயதிலும் எதையும் விட்டுக்கொடுக்க பெரும்பாலானவர்களுக்கு மனம் வராது.

ஆனால் தான் உயிருக்கு போராடிய நிலையில் தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான ஒருவருக்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் 85 வயது முதியவர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

வட மாநிலங்களில் கொரோனா கோரதாண் டவம் ஆடுகிறது. வீட்டுக்கு வீடு புகுந்து தாக்கும் கொரோனாவால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கும் ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைப்பதில்லை.

இந்த நிலையில், நாக்பூரை சேர்ந்த நாராயண் தபால்கர் (85). ஓய்வு பெற்ற மகாராஷ்டிர அரசு ஊழியரான இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டரும் ஆவார். கடந்த 16-ந் தேதி இவரது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்கள்.

அப்போது நாராயண் தபால்கர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தபால்கரை தவிர மற்றவர்களுக்கு லேசான தொற்று இருந்ததால் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால் தபால்கர் நோய் தொற்று கடுமையானதால் மூச்சு விட முடியாமல் திணறி இருக்கிறார். உடனே அருகில் உள்ள நகராட்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று உள்ளார்கள்.

அங்கு கொரோனா வார்டில் ஏற்கனவே நோயாளிகள் நிரம்பி இருந்ததால் தபால்கருக்கு படுக்கை கிடைக்கவில்லை. இதனால் 2 நாட்களாக அவசர வெளிநோயாளிகள் பிரிவில் படுக்கைக்காக தபால்கரும், அவரது உறவினர்களும் காத்துக்கிடந்தனர்.

அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி ஒருவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் நோய் தொற்று கடுமையாக இருந்துள்ளது. அவருக்கும் படுக்கை கிடைக்காமல் அவரது மனைவி போராடி இருக்கிறார்.

டாக்டர்கள், ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று ஒரு படுக்கை ஒதுக்கித் தாருங்கள். எப்படியாவது என் கணவரை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனால் வார்டில் படுக்கை காலியில்லாமல் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

இந்த சூழ்நிலையில், தபால்கருக்கு படுக்கை கிடைத்திருப்பதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதைக்கேட்டதும் தனது அருகில் இருந்த மகளிடம் ‘நான் நன்றாக வாழ்ந்து விட்டேன். அதோபார் சின்ன வயது பையன் உயிருக்குப் போராடுகிறான். நான் இறந்து போவதால் எந்த பாதிப்பும் இல்லை. என்னை வீட்டுக்கு அழைத்துச்சென்று விடுங்கள். கடைசி நேரத்தை உங்களோடு கழித்துவிட்டு செல்கிறேன். நான் இங்கிருந்து சென்றுவிட்டால் எனக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை இந்த இளம்வயது நோயாளியை பாதுகாக்கும்’ என்றார்.

ஆனால் தபால்கரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் விடாப்பிடியாக வற்புறுத்தி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.

பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டனர். வீட்டுக்சென்ற சில மணி நேரங்களிலேயே மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரும் பிரிந்தது.

அதே நேரம் அவர் விட்டுக்கொடுத்த படுக்கையில் இளம் வயது நோயாளி ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

தபால்கரின் இந்த மனிதாபிமான உதவி அனைவரையும் நெகிழ வைத்தது.

இதுபற்றி அவரது மகள் கூறும்போது, ‘என் தந்தை எப்போதுமே அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று தான் சொல்வார். இப்போதும் அதேபோல் இந்த உதவியை செய்து சென்றுள்ளார். அவரை நினைத்தாலே பெருமையாக உள்ளது.

வீட்டுக்கு அழைத்து வந்ததால் சிகிச்சை கிடைக்காமல் அவரது கடைசி நேரம் மிகவும் கடினமாக இருந்தது. கால் மற்றும் கைகளில் உள்ள விரல் நகங்கள் கருத்துப்போனது. உடல் முழுவதும் மரத்து போன நிலையில் தான் உயிர் பிரிந்தது’ என்றார்.

பகிரவும்...