Main Menu

31ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)

நினைவுப் பகிர்வு
லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)
இயற் பெயர் : சிலுவைராஜா. எட்மன் பேட்டன்
தாயின் மடியில் 06.10.1965
தாயக விடிவில்: 22.04.1987

லெப். கிருமானி அவர்களின் மீளா நினைவலைகள்
கிருமானி என்றாலே அவருடைய சிரித்த முகமும் சிங்காரத் தோற்றமும் அன்பான பார்வையும், கலகலப்பான பேச்சும் தான் அவரைத் தெரிந்த எல்லோருக்கும் நினைவு வரும், அவர் இருக்கும் இடத்திலே சிரிப்புக்கும் கும்மாளத்திற்கும் பஞ்சமே இருக்காது. ஒரு முறை அவரிடம் பழகிய எவருமே அவரை விட்டு விலக மறுப்பார்கள். தன்னுடைய சக போராளி நண்பர்களுடன் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். தன்னை நாடி வருபவர்களை அன்பாக உபசரித்து வயிராற உணவளிப்பதிலே இன்பங்கொள்பவர். கல்வி, கலை, விளையாட்டுக்களில் திறமையானவர். வீரத்தோடு, விவேகமும், ஆளுமையும் கொண்டவர். தேசியத்தலைவர், பொன்னம்மான், கிட்டு, ராதா போன்ற தளபதிகளின் அன்பிற்கும் பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் உரிய போராளி.
இவர் தனது இருபதாவது வயதில் விடுதலை வேட்கை கொண்டு இந்தியா புறப்பட்டுச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் 9வது பயிற்சிப் பாசறையைத் தொடங்கினார். இவர் கிறிக்கெற் ஆட்டத்தில் திறமையானவராக இருந்ததால் தலைவர் அவர்களால் ‘கிருமானி’ எனும் நாமம் சூட்டப்பட்டார். பயிற்சிக் காலத்தில் இவரது திறமையும் ஆளுமையும் கண்டு வியந்த தேசியத் தலைவர் இவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் ஆசிரியராக நியமித்தார்.
1986ஆம் ஆண்டு நாடு திரும்பிய இவர் முல்லைத் தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் இடம்பெற்ற இராணுவத்தினருடனான நேரடி மோதல்களில் பங்கேற்று தேசியத் தலைவரினதும் மூத்த தளபதிகளினதும் பாராட்டைப் பெற்றார். பின் யாழ்.கோட்டை சாந்தி தியேட்டர் காவலரண் பொறுப்பாளராய் கடமையேற்று இரவு பகல் பாராது கண் விழித்து தன் கடமையை செவ்வனே செய்தார். ‘எனது காவலரணைத் தாண்டி கோட்டை இராணுவம் வெளியேறுமாயின் என் இறந்த உடல் தாண்டித் தான் இராணுவம் முன்னேற முடியும்’ என்று தளபதி கிட்டுவிடம் வீர சபதமும் இட்டார். இந்தக் காலப்பகுயில் தளபதி கிட்டுத் தலைமையில் நடைபெற்ற யாழ் தொலைத் தொடர்பு நிலையத் தாக்குதலில் வெற்றிக் கனியைப் பறித்ததில் இவரின் பணியும் அளப்பரியது.
22.04.2017 அன்று நடைபெற்ற காங்கேசன்துறை, காபர்வியூ மினிமுகாம் தகர்ப்பிலும் வெற்றியுடன் திரும்புவார் என்று நாம் எண்ணியிருக்கையில் வெற்றிச் செய்தி மட்டும் கிடைத்தது. அவர் திரும்பி வரவேயில்லை. அவரது வீரச்சாவு அனைவரது தலையிலும் இடியாய் இறங்க கண்கள் குளமாக வேதனைத் தீயிலே வெந்து சாம்பலானோம்.

எம் தேசத்தில் சுதந்திரக் காற்று வீச வீரத்துடன் எதிரியின் பாசறை தகர்த்து, தாயக மண்ணிலே விதையாக ஆழப் புதைந்து வேரிட்டு விழுது பரப்பி எம்மவர் உள்ளங்களில் என்றும் வாசம் செய்யும் போர்ப் புலி வீரனே! மாவீரனே! கிருமானியே! எத்துணை இடர் வரினும் தடை வரினும் கொண்ட கொள்கையில் நெறி தவறாது தாயகக் கனவை என்றும் நாம் சுமந்து நிற்போம். இது உங்கள் மீதும் அனைத்து மாவீரர் மீதும் நாம் எடுக்கும் வீர சபதம்

லெப்.கிருமானி ஜோன்சன் (எட்மன் பேட்டன் சிலுவைராஜா)
காங்கேசன்துறை காபர்வியூ மினி முகாம் தகர்ப்பின் போது வீர மரணம்

புவி வாழ்வின் உச்சியிலே
மங்காப் புகழ்தனை பொறித்திட்ட – எம்
தானைத்தலைவன் வழி நடந்து
செங்களம் பல கண்டு
பகைவர் படை விரட்ட
களத்தையே கல்லறையாக்கி
கல்லறைப் பூக்களுக்கு கவிதையானவனே!

துரோகத்தால் வீழ்ந்திட்ட – எம்
விடுதலைப் பயணத்தின் தடை கண்டு
விண்ணிலே நீயும் உன் தோழர்களும் துடிக்காதீர்கள்
வீழ்ச்சியை எழுச்சியாக்க – எமக்கு
பாடம் சொல்லித் தந்தவர்கள் நீங்கள் தான்
இழந்து விட்ட சுதந்திரத்திற்கு
மீண்டும் ஒளியேற்றுவோம் – அதுவரை
கல்லறையில் கண் மூடித் தூங்குங்கள்!


31ம் ஆண்டு நீங்கா நினைவில் லெப். கிருமானி
  ( சிலுவைராஜா எட்மன் பேட்டன் / ஜோன்சன் )
சிங்களப் பேரினவாதம்
விளைவித்த தமிழர் துயரம்
தாங்கவொண்ணா வலியை
இளம் எட்மனின்  இதயத்தில்
ஏற்றிய போது
அநீதிக்கு எதிராக
அவன் கரம் எழுந்தது
குட்டக் குட்டக் குனிந்து போக
தமிழன் அடிமைக் கூட்டமல்ல
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
இளம் எட்மனின் நெஞ்சம்
விடுதலை நெருப்பால் பற்றி தெரிந்தது
சிங்களக் கொடுமையால்
கிளர்ந்த உள்ளத்தில்
திருவிவிலியத்தின் வீரநாயகர்கள்
தாவீது, மக்கபேயரின் போர்க்கோலம்
புத்தெழுச்சி ஊட்டியது
கிறித்தவ குருத்துவத்தை நோக்கிய
எட்மன் பேட்டனின் இளம் பாதங்கள்
தாயக விடுதலையின் திசையில்
தானாய்த் திரும்பின
நாட்டின் அழைப்பை
ஏற்ற வேங்கையாய்
சீறும் புலிப்படைப் பாசறை சேர்ந்தான்
ஜோன்சன் எனும் போர்ப்புலியாகி
புயலெனச் சுழன்று செயற்படலானான்
ஊக்கமூட்டி உருவாக்கிய தலைவன்
கிருமானி எனும் நற்பெயர் சூட்டி
போர்ப்பயிற்சி ஆசிரியனாய்
புதிய இளம் தளபதியாய்
பாசத்துடன் வளர்த்தெடுத்தார்
தமிழகத்தில் அமைந்த
புலிப்படைப் பயிற்சி பாசறையின்
பொறுப்பாளனாய் கிருமானி
பலநூறு போராளிகளை
திறமுடன் உருவாக்கினான்
மகளிர் புலிப்படையைப் பயிற்றுவித்து
மண்ணின் விடுதலைப் போருக்கு
வீரியமூட்டினான்
தலைவரின் நன்மதிபம்பை பெற்ற
இளம் தளபதியாய்
பொன்னம்மானால் புடமிடப்பட்ட
போர்ப்பயிற்சி ஆசிரியனாய்
திறமுடன் வளர்ந்த கிருமானி
தாயகம் திரும்பி
தாக்குதல்கள் நடாத்தினான்
தமிழீழமெங்கும் அவன் பாதங்கள்
ஓயாது நடமாடிப் போராடின
கிருமானின் தாக்குதல்கள்
சிங்கள ஆக்கிரமிப்பபை
கணிசமாகக் குறைத்தன
இளம் புலிப்படையின்
ஆயுதக் களஞ்சியத்தை நிரப்பின
வீறுகொண்டெழுந்த விடுதலைப் புலிகளின்
சீரிய வளர்ச்சியில்
கிருமானின் பங்களிப்பு நிறைந்தேயிருந்தது
யாழ் தளபதி கிட்டுவின் கட்டளையில்
யாழ் கோட்டை முற்றுகைப் சமரில்
வீறுடன் களமாடிப்  பெரும்வாகை சூடினான்
எங்கள் கிருமானி
22 – 4 – 1987 அன்று
காங்கேசன்துறை மினிமுகாம் தகர்ப்பில்
சிங்களப் படைகளை சிதறடித்து
ஏராளமான ஆயுதங்களை
அள்ளிய சமரில்
வெற்றிகள் குவித்து
வீரகாவியமானார் லெப். கிருமானி
தலைவரையும் தாயகத்தையும்
உயிருக்குயிராய் நேசித்த கிருமானி
இப்பொழுதும் எப்பொழுதும்
தமிழ் இதயங்களில் கலந்திருப்பார்
தமிழரின் புலிப்படை வரலாற்றில்
கிருமானி தனி யிடம் வகித்திருப்பார்
மலரும் தமிழீழத்தில் லெப். கிருமானி
மாண்புடன் நிலைத்திருப்பார்
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிரவும்...