Main Menu

ஹைதராபாத் என்கவுன்டர்: பொலிஸார் மீது பாயவுள்ள மனித உரிமைகள் சட்டம்?

ஹைதராபாத் என்கவுன்டர் தொடர்பாக தெலுங்கானா மாநில பொலிஸ் அதிகாரிகள் மீது மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்படவுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர்களும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் குணரத்ன சதாவர்டே கூறுகையில் ‘‘ஹைதராபாத்தில் என்கவுன்டர் என்ற பெயரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது.

பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி மனித உரிமைகள் ஆணையம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

தெலுங்கானா மாநில பொலிஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனித உரிமைகள் ஆணையகத்திடம் நாம் முறைப்பாடு அளிக்கவுள்ளோம். அதுபோலவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் மனு அளிப்போம்’’ எனக் கூறினார்.

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

கடந்த 27ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

பகிரவும்...