ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து – பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்வை(49). இவரது மனைவி வீரலட்சுமி(45). இவர்களுக்கு காவியா(15), தனலட்சுமி(16) ஆகிய மகள்களும், அஸ்வின்(10) என்ற மகனும் உள்ளனர். சேர்வை தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம் மருதங்குடியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு காரில் வத்திராயிருப்பு திரும்பினார்.
மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் பூபதி, கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அங்காள ஈஸ்வரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
