Main Menu

ஹேமசிறி பெர்னான்டோவும், பூஜித ஜயசுந்தரவும் சிஐடியினரால் கைது!

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக இவர்கள் இருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஹேமசிறி பெர்னான்டோ கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவின் அவசர கவனிப்பு பிரிவில் வைத்தும், பூஜித ஜயசுந்தர நாரஹேன்பிட்டியில் உள்ள காவல்துறை மருத்துவமனையில் வைத்தும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் நேற்று பதில் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இன்று காலை இருவரையும் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகும்படி, அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், ஹேமசிறி பெர்னான்டோ மார்பு வலி என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவின் அவசர கவனிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதேவேளை, பூஜித ஜயசுந்தரவும், மார்பு வலி என, நாரஹேன்பிட்டியில் உள்ள காவல்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், இருவரும், குற்றவிசாரணைப் பிரிவினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகிரவும்...