Main Menu

வேட்பாளர் தெரிவுக்காக பாராளுமன்ற குழுவின் நிலைப்பாட்டை பெறவேண்டிய அவசியமில்லை – ஐ.தே.க

கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து பெயரிடுவதற்காக பாராளுமன்றக் குழுவின் நிலைப்பாட்டினை பெறவேண்டிய அவசியமில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிஷங்க நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளரை பெயரிடவேண்டிய சம்பிரதாயம் இல்லையென்று குறிப்பிட்ட அவர் கட்சியின் யாப்பில் இந்த விடயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இழுபறியான நிலைமைகள் நீடிக்கின்ற நிலையில் அதுகுறித்து கட்சியின் சட்டச்செயலாளர் சட்டத்தரணி நிஷங்க நாணயக்காரவிடத்தில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பழம்பெரும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி யாப்பு விதிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. இந்நிலையில் கட்சியின் தற்போதைய யாப்பின் 9 சரத்தின் முதலாவது பிரிவில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு சம்பந்தமான விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுகின்றபோது மத்திய செயற்குழுவினால் அமைக்கப்படும் வேட்பாளர் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும்.

அக் குழுவின் முன்மொழிவுக்கு அமைவாகவும் மத்திய செயற்குழுவின் அங்கீகாரத்துடனும் தான் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் தெரிவு செய்யப்படும் என்றே கூறப்பட்டுள்ளது.

அதில் எங்குமே பாராளுமன்றக் குழவின் நிலைப்பாட்டினையோ அல்லது அங்கீகாரத்தினையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கவில்லை. அதேபோன்று ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படாது வேட்பாளரை பெயரிடும் சம்பிரதாயமும் இல்லை. அதற்கான சட்ட ஏற்பாடுகளும் இல்லை.

ஆகவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் எமது வேட்பாளரை தெரிவு செய்வதற்கான கால அவகாசம் இருக்கின்றது என்றார்.

இதேநேரம்  ஐக்கியதேசியக் கட்சியின் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதியிடப்பட்ட யாப்பின் அடிப்படையிலேயே சட்டச்செயலாளர் நிஷங்க நாணயக்கார இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...