Main Menu

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ரா, குஜராத், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் ராகுல் காந்தி வெளியிட்ட செய்தி:
கேரளா, கர்நாடகா, மகாராஷ்ரா, குஜராத், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆகையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அங்குள்ள மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது எண்ணம் முழுவதும் வெள்ளத்தில் இருந்து மீண்டுவர முயன்று வரும் வயநாடு தொகுதி மக்களின் நினைவாகவே உள்ளது. நான் உடனடியாக வயநாடு வர விரும்பினேன், எனது வருகை மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்ததால் எனது முடிவை மாற்றிக்கொண்டேன். ஆனாலும், மக்கள் இந்த கனமழை வெள்ளத்தில் இருந்து மீண்டுவர இறைவனை பிராத்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...