Main Menu

வுகான் ஆய்வகத்தில் உலக சுகாதார நிபுணர் குழு விசாரணை

உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் சீனாவின் வுகான் ஆய்வகத்துக்கு சென்று இன்று(புதன்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என அமெரிக்கா குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. எனினும், அதை சீனா திட்டவட்டமாக மறுத்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி கண்டறிய உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவை சீனாவுக்கு அனுப்பியது. அந்த குழுவினர் வுகான் நகருக்கு சென்று தங்களது விசாரணையை தொடங்கினர்.

அங்கு முதலில் வைரஸ் பரவிய இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். சீன விஞ்ஞானிகளிடம் தகவல்களை கேட்டறிந்தனர். நேற்று வுகான் நகரில் உள்ள விலங்குகள் வைத்தியசாலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இன்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் வுகானில் உள்ள ஆய்வகத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவர்கள் பலத்த பாதுகாப்புடன் ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...