Main Menu

விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் குற்றச்சாட்டு!

விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்குலைவையும் உருவாக்க சதித்திட்டம் நடப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று இடம்பெற்ற 11ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் முடிவெதுவும் இன்றி தோல்வியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி குடியரசு தினத்தில் டிடக்டர் பேரணி திட்டமிட்டபடி நடக்கும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்த சூழலில், நேற்றிரவு சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடத்திவந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த ஒருவர் சந்தேகத்திடமான முறையில் இருப்பதைப் பார்த்து அவரைப் பிடித்தனர். அவரிடம் விவசாயிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

பிடிபட்ட அந்த நபரை வைத்துக்கொண்டு, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஊடகங்களுக்கு நேற்று பேட்டியளித்தனர்.

இதன்போது, தாங்கள் போராடும் போராட்டக் களத்தில் முகமூடி அணிந்த ஒருவரைப் பிடித்துள்ளதாகவும் அவரை ஹரியானா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விவசாயிகள் சங்கத் தலைவர் குல்வந்த் சிங் சாந்து கூறியுள்ளார்.

அத்துடன், தாங்கள் நடத்தும் போராட்டத்தைச் சீர்குலைக்கச் சதி நடப்பதாகக் கருதுவதாகக் கூறியுள்ள அவர், தமது போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் நால்வரைக் கொலை செய்யவே முகமூடி அணிந்தவர் வந்துள்ளார் என்பதுடன் எதிர்வரும் 26ஆம் திகதி டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடக்கும் டிரக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும் சதி நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டெல்லி பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி டிரக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும், இதன்மூலம் போராடும் விவசாயிகள் மீது பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என முகமூடி அணிந்தவர் தெரிவித்துள்ளார் என விவசாயிகள் சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...