Main Menu

விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் நீதிகோரி மன்னாரில் போராட்டம்!

மன்னார், மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்திவந்தவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு உடனடியாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் நீதிகோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இரு சகோதரிகளின் மரணத்திற்கும் நீதிகோரி குடும்ப உறவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பு அமைதியான முறையில் சமூக இடைவெளிகளைப் பேணி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

எனினும் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நாட்டின் தற்போதைய சூழ்நிலையக் கருத்திற்கொண்டு மக்கள் ஒன்றுகூடி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதால் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும் அவர்கள் அவ்விடத்தில் இருந்து செல்லாத நிலையில் பொலிஸாரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 16 பேர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதோடு, இவ்வாறான போராட்டங்களை தற்போதைய சூழ்நிலையில் செய்ய முடியாது என எச்சரித்ததோடு, இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறு கோரி அவர்களை விடுவித்தனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் ஊடகங்களுக்குக் கருத்தும் தெரிவிக்கையில், “மன்னார் அஞ்சல் அதிபராகக் கடமையாற்றிய சந்தியோகு ரெறன்சியா (வயது-25), வைத்தியசாலை பெண் பரிசாரகராக கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான லின்ரா கோபிநாதன் (வயது-42)  ஆகிய இரு சகோதரிகளும் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி மதியம் மன்னார் பரப்பான் கண்டல் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் விபத்து ஏற்பட்டது.

இரண்டு சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டு பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்தியவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனவே, உறவுகளாகிய எமக்கு எதுவித உதவிகளும் தேவையில்லை. உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும். இப்படியான ஒரு சம்பவம் இனிமேல் இடம்பெறக் கூடாது.

பணம் இருந்தால் எதனையும் செய்ய முடியும் என்பதற்காக ஏழைகளுக்கு அநீதி இடம் பெறக்கூடாது.எனவே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே குறித்த சகோதரிகளிம் குடும்ப உறவுகாளாகிய நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தனர்.

பகிரவும்...