Main Menu

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சுற்றுலாத்துறைக்கு 18 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!

கொவிட்-19 தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு 18 பில்லியன் யூரோக்கள் (19 பில்லியன் டொலர்) செலவிடவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார்.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஓய்வுநேர இடங்கள் மற்றும் ஹோட்டல்கள், கடற்கரைகள் வருகைகள் என பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இது பிரான்ஸூற்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகின்றது.

2019ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 90 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு விஜயம் செய்துள்ளனர். இது உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட நாடாக திகழ்கிறது என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 2.3 ட்ரில்லியன் யூரோ பொருளாதாரத்தில் சுற்றுலா 8 சதவீதம் ஆகும்.

இந்தநிலையில் சரிவை நோக்கி சென்றுள்ள சுற்றுலாத்துறையை மீட்பது ஒரு தேசிய முன்னுரிமை என பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘நவீன வரலாற்றில் சுற்றுலா அதன் மோசமான சவாலாக இருப்பதை எதிர்கொள்கிறது. இது பிரான்ஸ் பொருளாதாரத்தின் கிரீட ஆபரணங்களில் ஒன்றாகும். அதை மீட்பது ஒரு தேசிய முன்னுரிமை.

95 சதவீத ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், நஷ்டம் மற்றும் வேலை இழப்புகளை தவிர்ப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை.

இதுவரை சுற்றுலாத்துறையை தொடர்புபட்ட 50,000 நிறுவனங்களுக்கு 6.2 பில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் இறுதி வரை சுற்றுலாத்துறைக்கான இழப்பீடுகள் பகுதி பகுதியாக வழங்கப்படும். அதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலை இழப்புகளைத் தடுக்க, தொழிலாளர்கள் மொத்த ஊதியத்தில் 70 சதவீதம், நிறுவனங்களுக்கு அரசாங்கம் திருப்பிச் செலுத்துகிறது.

மேலும் குறைந்தது செப்டம்பர் இறுதி வரை இந்த நடவடிக்கையை அரசாங்கம் நீடிக்கும்’ என கூறினார்.

பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1 இலட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதோடு, 27 ஆயிரத்து 400இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...