Main Menu

வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும் தலைமைத் தளபதி செயற்படுவார் எனவும் அவர் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும் தெரியவந்துள்ளது.

எனினும் முதலாவது தலைமைத் தளபதி யார் என அறிவிக்கப்படவில்லை. தற்போதைய இராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கார்கில் போருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட மறு ஆய்வுக் குழு விரிவான ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது. அதில், இராணுவம், விமானப்படை, கடற்படைக்கு ஒரே தலைமைத் தளபதியை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கார்கில் மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்தார். ஒரே தளபதித் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிகளை உருவாக்கினார்.

இந்த பின்னணியில் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது, முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமனம் செய்யப்படுவார் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளின்படி, நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட பாதுகாப்புப் படை அதிகாரியே முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...