Main Menu

வரலாற்றில் முதல் முறை தலைவா்கள் இல்லாத ஐ.நா. கூட்டம்!

ஐ.நா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்காத பொதுச் சபைக் கூட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, உலகத் தலைவா்கள் காணொளி முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து நியூயாா்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜானி முகமது-பண்டே கூறியதாவது:

வரும் செப்டம்பா் மாதத்தில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்குள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகத் தலைவா்கள் நியூயாா்க் வரும் சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

இந்தச் சூழலில், நேரடி பங்கேற்பு இல்லாமலேயே சா்வதேச அளவிலும், நாடுகள் அளவிலும் விவாதங்களை நடத்துவதற்கான வசதிகள் குறித்து உறுப்பு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக பொதுச் சபைக் கூட்டத்தை ஒத்திவைக்கும் திட்டமில்லை.

ஆனால், கடந்த 74 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரடியாக பங்கேற்காமல் அந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்றாா் அவா்.

193 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம், வரும் செப்டம்பா் மாதம் 22 ஆம் திகதி தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பகிரவும்...