Main Menu

வடக்கில் கல்வித் தரத்தினை உயர்த்த அனைவருக்கும் அழைப்பு

வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள கல்வித் தரத்தினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்தியத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி கந்தசாமி, திறந்த பல்கலைக் கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் சான்றிதழ் பெற வந்த மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது இளங்கோவன் கூறுகையில், “இலங்கையைப் பொறுத்த வரைக்கும் கல்வி என்ற ஒன்றுதான் அபிவிருத்திக்கான ஒரு சாவியாக காணப்படுகின்றது. இலங்கையானது அதிக சனத்தொகையாக இளம் வயதினரைக் கொண்ட நாடாக உள்ளது.

எனவே கற்றவர்கள் தாங்கள் பெற்ற பட்டத்தினை ஒரு சான்றாக மட்டும் அதை பயன்படுத்தாது தாங்கள் கற்ற கல்வியை சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படுத்தக் கூடியவாறு எதிர்கால சந்ததியினரை வழிப்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

கல்வியினை நாம் முன்னோக்கி கொண்டு வருவதன் மூலமே அபிவிருத்தியினை முன்னெடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...