Main Menu

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்க குழு நியமனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த  சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையில் இந்த குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று (வியாழக்கிழமை) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்தே, சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...