Main Menu

ரஷியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆலோசனை

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக, ரஷியா, அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் ஆலோசனை கூட்டம் இன்று மாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும், பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர்  நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில பகுதிகளை  கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் உள்நாட்டு பாதுகாப்பு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ  கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்  பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் பொதுமக்கள் உட்பட பலர்  உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரம் தொடர்பாக, ரஷியா, அமெரிக்கா, சீனா  மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. 
இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் சல்மாய் காலிசாத் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் நடைபெற்று  வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரத்தில் 4 நாடுகளின் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படும்’ என்றார்.  
முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் வெளியுறவுத்துறை செயலாளர் முஹம்மது ஏஜாஸ் தலைமையிலான குழு  பங்குபெறும் என பாகிஸ்தான் தூதர் செய்தியாளர்களுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...