Main Menu

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி தொடங்கும் வகையில் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி இருந்தார்.

அந்த மன்றத்துக்கு தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டனர்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மன்றத்தில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் ரஜினி மக்கள் மன்றம் எல்லா மாவட்டங்களிலும் காலியாகி வருகிறது.

இந்தநிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 300 பேர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அந்த நிர்வாகிகள் நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர்.

தி.மு.க.வில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளில் ராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் செந்தில்வேல், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த சுப்புராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீதா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள், தென்சென்னை மாவட்டம், வட்டச்செயலாளர் இ.முத்துராஜ் தலைமையில் வட்டச் செயலாளர் எம்.ராஜேஸ்வரி, எம்.எல்.ராஜேஷ், எம்.எல்.ரூபன் ஜெரேமியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்,

திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஏ.சுந்தரி தலைமையில் விருகை பகுதி 138-வது வட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மகளிர் அணியினர் என 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., ராமநாதபுரம் மாவட்ட கழகப்பொறுப்பாளர் காதர் பாட்சா, முத்துராமலிங்கம், கழக சிறுபான்மை நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

பகிரவும்...