Main Menu

யேமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு – 26 பேர் வரையில் உயிரிழப்பு

யேமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

யேமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது.

அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கின்ற அதேவேளை, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள யேமன் அரசின் அமைச்சரவையில் பங்குபற்றியவர்கள் பயணித்த விமானம் அந்நாட்டின் எடன் விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.

அமைச்சரவை உறுப்பினர்கள் வந்திறங்கிய சில நிமிடங்களில் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வந்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக யேமன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த குண்டுவெடிப்பில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலையச் செய்யவே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக யேமன் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

பகிரவும்...