Main Menu

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறப்பையொட்டி கிறித்தவ தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்போர் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதி அறைகளிலும், அரங்குகளிலும் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். கோவில்கள் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் புத்தாண்டையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உணவகங்களையும், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களையும் இரவு 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்கரை வீதிகளில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீதிகள், கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு கடற்கரைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள், பாலங்கள் அனைத்திலும் வீதித் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நகரின் பல்வேறு வீதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடைபெற்றது. இரவு முழுவதும் ரோந்துப் பணியும் முடுக்கிவிடப்பட்டிருந்தது.

மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை வீதிகளில் பொலிஸார் அதிகளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அனுமதியின்றி புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும், சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் தடையை மீறி திரள்பவர்களை தடுத்து நிறுத்தும் வகையிலும் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...