Main Menu

யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின்

துபாய் பயணத்தின் போது நான் பல கோடி ரூபாயை எடுத்துச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதற்கு நமது கூட்டணி கட்சி தலைவர்களே பதில் அளித்து விட்டதால் மேலும் பேச தேவையில்லை.

தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் மகன் வினோத்குமார்-ரேவதி திருமணம் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்‌ஷன் சென்டரில் நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மண மக்களை வாழ்த்தி பேசினார். அப்போது கூறியதாவது:-

இந்த திருமணம் சுயமரியாதை உணர்வுடன் நடக்கும் திருமணம். சீர்திருத்த திருமணம். தமிழ் திருமணம். தமிழுக்கு பெருமை சேர்க்கும் திருமணம்.

தமிழுக்கு பெருமை சேர்க்கத்தான் செம்மொழி என்ற பெருமையை கலைஞர் பெற்றுத்தந்தார். அந்த பெருமையோடும், உணர்வோடும் இந்த திருமணம் நடந்துள்ளது.

1967-ல் அண்ணா முதல்- அமைச்சராக பதவியேற்றதும் சீர்திருத்த திருமணம் செல்லும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். அதே சீர்திருத்த திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்க எனக்கு வாய்ப்பளித்த பொன்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் மதசார்பற்ற கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு தந்தார்கள். அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக வெற்றியை தேடித்தந்தார்கள். அந்த உணர்வோடு இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

பொன்குமார், கலைஞருக்கு நெருக்கமானவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தொழிலாளர்களுக்காக உழைக்க கூடியவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை.

எனவே தான் நான் பொறுப்பேற்றதும் அவருக்குத்தான் முதல் வாரிய தலைவர் பதவியை கொடுத்தேன். அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

துபாய் பயணத்தின் போது நான் பல கோடி ரூபாயை எடுத்துச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதற்கு நமது கூட்டணி கட்சி தலைவர்களே பதில் அளித்து விட்டதால் மேலும் பேச தேவையில்லை. சிக்கலில் இருந்து தப்பிக்கவே டெல்லி சென்றதாகவும் எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளார். நான் யாருடைய காலிலும் விழ செல்ல வில்லை. தமிழகத்தின் உரிமைக்காக சென்றேன்.

எனக்கு யாருடைய காலிலும் விழ வேண்டிய அவசியம் இல்லை. விழவும் மாட்டேன். ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. பதவி ஏற்ற போதே குறிப்பிட்டேன் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் நான்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருமண விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, சி.வி.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பால கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமூகநீதி சத்திரியர் பேரவை மாநில இணை பொது செயலாளர் எஸ்.எம்.குமார்.

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவரும், மனை தொழில் கட்டுமான கூட்டமைப்பின் செயலாளருமான டாக்டர் விருகை வி.என். கண்ணன், த.வேலு எம்.எல்.ஏ., கவிஞர் ரவி பாரதி, பூச்சி முருகன், கே.கே.நகர் தனசேகரன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சமூகநீதி சத்ரியர் பேரவை வர்த்தகர் அணி நிர்வாகிகள் ஏழுமலை, பாண்டியன், தாமோதரன்.

தரகர் சங்கம் எஸ்.யுவராஜ், மணல் லாரி சங்க உரிமையாளர் எஸ்.ஜெகதீசன், பொருளாளர் ஏ.பால சுப்பிரமணி, சுந்தர்ராஜ், மலர் ஆறுமுகம், ரஜினி ராஜ், பி.ஆர்.ஒ. வசந்த், சிதம்பரேஷ், எஸ்.சுதர்சன், சீனிவாசன், பானு சோபன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...