Main Menu

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு – மனித உரிமைகள் அமைப்புக்கள்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகளை எதிர்கொண்டுள்ள யஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக 50இற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புக்களும் 150 முக்கிய நபர்களும் கையெழுத்திட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் முதலாம் திகதி யஸ்மின் சூக்கா, வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கையின் தேசிய புலனாய்வுத்துறை பணிப்பாளர் மேஜர் சால்லேயை அவமரியாதை செய்யும் வகையில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கடந்த 18ஆம் திகதி யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்களுக்கு சுரேஸ் சால்லே தனது முறைப்பாட்டைத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தன்மீது சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்காக யஸ்மின் சூக்காவும், அவரின் நிறுவனமும் 10 பில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கவேண்டும் என்று கோரி சால்லே சட்டக் கோரிக்கை கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், யஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக மனித உரிமைகள் அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தினால் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்த விரும்புகின்றன.

சூக்காவிற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுக்களும் அச்சுறுத்தல்களும் மனித உரிமைகள் பாதுகாவலராகவும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞராகவும் உள்ள சூக்காவினுடைய நீண்ட காலப் புகழை பாதிப்படையச் செய்வதாக உள்ளன.

ஜூலை 2010இல் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது புரியப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றி ஐ.நா பொதுச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவில் ஜஸ்மின் சூக்கா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சூக்காவிற்கு எதிராக இலங்கை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டிருப்பவை சூக்காவிற்கும் அவருடைய அமைப்பிற்கும் மனித உரிமைகள் சமூகத்திற்கும் எதிரான தாக்குதல் மட்டுமல்லாது இது அவருடைய பணியுடன் தொடர்புபட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்கள் மீதான தாக்குதலும் ஆகும்.

மனித உரிமைகளையும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் அவருடைய சட்ட ரீதியான செயற்பாடுகள் மேலும் குறிப்பாக உண்மை மற்றும் நீதிக்கு ஆதரவான அவரது செயற்பாடுகளுக்கு நேரடிப் பதிலடியாகவுள்ள சூக்காவிற்கு எதிரான தாக்குதல்கள் குறித்து நாங்கள் எமது ஆழ்ந்த கரிசனையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை சர்வதேச உரிமைகளை மீறுவதாக உள்ளதுடன் நீண்ட காலமாக உள்ள அநீதி மற்றும் இலங்கையில் நிலவும் குற்றத்தில் இருந்து பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இன்னுமொரு முயற்சி இதுவாகும்.

இந்நிலையில் இவற்றுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ள அனைவரும், பொறுப்புக் கூறலுக்கும் மற்றும் மனித உரிமைகள் பற்றிய குறிக்கோள்களுக்காகவும் பாடுபடுபவர்களை தொடர்ச்சியாகப் பலவீனப்படுத்துவதை விட மனித உரிமைகளை மதிப்பதற்கு தனது தீவிரமான ஈடுபாட்டை வெளிக்காட்டுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...