Main Menu

மேற்கு லண்டனின் ப்ரெண்ட் ஃபோர்டில் (BRENTFORD) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா?

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (06.10.20) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின் தகவல்களைத் தொடர்ந்து அவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய நபர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டார். அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது; ஆனால், சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இவருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் எனவும் குழந்தை 3 வயது மதிக்கத்தக்கது எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மரணமடைந்த இவர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், தென்ஆசியர்கள் எனக் கூறப்படுகின்ற போதும் லண்டன் காவற்துறையினர் இந்த செய்தி பதிவேற்றப்படும் வரை இதனை உறுதிப்படுத்தவில்லை.

இந்த மரணங்கள் தொடர்பில் வேறு எவரையும் காவற்துறையினர் சந்தேகிக்கவில்லை எனவும், தேடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தை மற்றும் இரண்டு பெரியவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கும் காவற்துறையினர், இறப்பு தொடர்பாக வேறு எவரையும் தேடவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த இறப்புக்கள் குறித்து தாம் இவர்களது உறவினர்களுக்கு அறிவிப்பதற்கான முயற்சிகள் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். காவற்துறை  அதிகாரிகளும் தடயவியலாளர்களும் கிளேபாண்ட்ஸ் வீதியில் உள்ள ஒரு குடியிருப்புத் தொகுதிக்கு வெளியே சம்பவ இடத்தில் உள்ளனர்.

இந்த இறப்புகள் குறித்து கருத்து வெளியிட்ட ஷெரி திபா என்ற குடியிருப்பாளர், ஏழு ஆண்டுகளாக இந்த தொடர்மாடிக் குடியிருப்பில் வசித்து வருவதாகவும் அது ஒரு “நல்ல பகுதி” என்றும் கூறினார். இந்த கட்டிடத்தில் இவர்கள் இறந்துவிட்டதனை தன்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை எனவும் இது மிகவும் அமைதியான பகுதி, மிகவும் அருமையான குடியிருப்பு, தனக்கு எந்தப் பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டது இல்லையென்றும் இது குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...