Main Menu

கொரோனா தாக்கத்தின் அதியுச்சம் குறைந்து வருகிறது

உலக நாடுகளில் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்தைக் கடந்திருந்த உயிரிழப்புக்கள் சற்றுக் குறைவடைந்துள்ளன.

உலக நாடுகளில் இதுவரை 24 இலட்சத்து 7ஆயிரத்து 340 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6 இலட்சத்து 25 ஆயிரத்து 128 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நாட்களாக ஒரேநாளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவந்த நிலையில் நேற்று சற்றுக் குறைவு ஏற்பட்டு 4 ஆயிரத்து 984 ஆக மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 69 பேர் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 561 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்தமாக 40 ஆயிரத்து 575 பேரின் மரணங்கள் பதிவாகி உலக நாடுகளில் அதிக உயிரிழப்பு பதிவாகிய நாடாக அமெரிக்கா உள்ளது.

அந்நாட்டில், 25 ஆயிரத்து 844 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 7 இலட்சத்து 64 ஆயிரத்து 636 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கிட்டத்தட்ட ஏழரை இலட்சம் வைரஸ் தொற்றாளர்களில் இதுவரை 71 ஆயிரத்து 187 பேர் மாத்திரமே குணமடைந்துள்ளனர்.

மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் மாநிலத்தில் நேற்று மட்டும் 627 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மட்டும் மொத்த மரணம் 18 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. இதனைவிட வைரஸ் தொற்றாளர்கள் 2 இலட்சத்து 47 ஆயிரத்து 215 ஆகப் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, நியூஜெர்ஸி மாகாணத்தில் நேற்று 132 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 202 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைவிட மஸ்ஸசுசெற்ஸ் (Massachusetts) மாநிலத்தில் 146 பேரும் பென்சில்வேனியாவில் 135 பேரும் மரணித்துள்ளனர். அங்கு பாதிப்புக்கள் கடந்த சில வாரங்களைவிட குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை ஒரு இலட்சத்து ஆயிரத்து 836 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், நேற்று குறித்த நாடுகளில் 2 ஆயிரத்து 558 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த நாட்களில் நிலவிய உயிரிழப்புக்களை விட சற்றுக் குறைந்துள்ளமையை அறிய முடிகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று 29 ஆயிரத்து 218 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்தமாக 10 இலட்சத்து 89 ஆயிரத்து 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 3 இலட்சத்து 9 ஆயிரத்து 495 பேர் குணமடைந்துள்ளனர்.

குறித்த நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வந்தநிலையில் நேற்று கணிசமாக உயிரிழப்புக்கள் குறைந்துள்ளன.

அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 433 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 23 ஆயிரத்து 660 ஆகப் பதிவாகியுள்ளன.

மேலும், நேற்று புதிய நோயாளர்கள் 3 ஆயிரத்து 47 பேர் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 972 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை பதிவாகியுள்ளது.

இதனைவிட, ஸ்பெயினில் நேற்று 410 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் மொத்த மரணங்கள் 20 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளன.

அத்துடன், புதிய நோயாளர்கள் 4 ஆயிரத்து 258 ஆக உள்ளதுடன் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 674 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 77 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து, பிரான்ஸில் கடந்த ஒருவார காலமாக ஆயிரத்து 500 வரை உயிரிழப்புக்கள் பதிவான நிலையில் நேற்று கணிசமாகக் குறைந்து 395 ஆக மரணங்கள் பதிவாகியுள்ளன.

பிரான்ஸில் மொத்தமாக 19 ஆயிரத்து 718 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 894 பேர் ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வைரஸால் நேற்று மட்டும் 596 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 16 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று மட்டும் 5 ஆயிரத்து 850 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 67 பேராக அதிகரித்துள்ளது.

இதனைவிட ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 742 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 88 ஆயிரம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று 104 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 4 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளன.

மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று மட்டும் 230 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளன.

இதனைவிட, நெதர்லாந்தில் நேற்று மட்டும் 83 பேர் மரணித்துள்ளதுடன் ரஷ்யாவில் 48 பேரும், அயர்லாந்தில் 39 பேரும் ரோமானியாவில் 30 பேரும் நேற்று மரணித்துள்ளனர். அத்துடன் பிரெஸிலில் நேற்று 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்க நாடான கனடாவில் நேற்று 117 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளன.

ஆசியாவில் நேற்று 385 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் துருக்கியில் 127 பேர் மரணித்துள்ளதுடன் ஈரானில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைவிட, இந்தியாவில் 38 பேரும் இந்தோனேஷியாவில் 47 பேரும் நேற்று மரணித்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பேரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 16 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

பகிரவும்...