Main Menu

மீண்டும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- மணிவண்ணன்

தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைக் குரல்களை நசுக்கி, மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியை  ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக தமிழ் தேசிய  மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாகர் கோயில் குண்டுவெடிப்பு சம்பவம், அமைச்சுக்களின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகள் நியமனங்கள் ஆகியவை தமிழ் மக்களை அச்ச நிலைக்குள் வைத்திப்பதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நடவடிக்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சி நாகர் கோயிலடியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

மேலும் குறித்த குண்டு வெடிப்பு, பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்றும் அதில் பொலிஸார் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இச்சம்பவம் தொடர்பில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் குடவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சிலரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உண்மையிலேயே இந்த செய்திகள் என்பது தமிழ் மக்களை அச்சுறுத்துகின்ற அல்லது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான அச்சத்தை மீண்டும் ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாகவே நாங்கள்  பார்க்கின்றோம்.

மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியின் தொடக்கப் புள்ளியாகவே இதை பார்க்க வேண்டும். குறிப்பாக நாடு முழுவதிலும் பல அமைச்சுக்களின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நாடு மீண்டும் ஒரு பயங்கரமான சூழலுக்குள் தள்ளப்படுவதையே இந்த நியமனங்கள் எடுத்துக் காட்டுகின்றது.

குறிப்பாக தமிழ் மக்கள் மீண்டும் ஒரு அச்ச நிலைக்குள் தள்ளப்படுகின்றார்கள் என்பதையே அரசு தனது செயற்பாடுகள்  ஊடாக தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றது.

தமிழ் மக்களின் ஜனநாயகம் ரீதியான உரிமை குரலை அல்லது உரிமைக்கான போராட்டங்களை பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு நசுக்குகின்ற அரசின் செயற்பாட்டின் ஆரம்ப புள்ளியாக இவை அமைகின்றது என்பதை ஊகிக்க கூடியதாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...