Main Menu

மியாமி பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர்- ஆஷ்லே பார்டி சம்பியன்

அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டியும்  சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

சரி தற்போது முதலாவதாக பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும் , செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் முதல் செட்டே, இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்தது.
டை பிரேக் வரை நீண்ட இந்த முதல் செட்டில், கடுமையாக போராடி செட்டை 7-6 என ஆஷ்லே பார்டி கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆஷ்லே பார்டிக்கு கரோலினா பிளிஸ்கோவா, கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த எதிர்பார்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய ஆஷ்லே பார்டி, 6-3 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார். இதுவே ஆஷ்லே பார்டி, இத்தொடரில் பெற்றுக்கொண்ட முதல் சம்பியன் பட்டமாகும்.
………….

அடுத்ததாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஜோன் இஸ்னரை  எதிர்கொண்டார்.

இரசிகர்களின் உச்சக்கட்ட கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ரோஜர் பெடரர், முதல் செட்டை எவ்வித அழுத்தமும் இல்லாமல், 6-1 என செட்டை கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஜோன் இஸ்னர் பெடரருக்கு சற்று அழுத்தம் கொடுத்தார்.

எனினும் அதனை திறம்பட சமாளித்த ரோஜர் பெடரர், 6-4 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

இத்தொடரில் ரோஜர் பெடரர், பெற்றுக்கொண்ட நான்காவது சம்பியன் பட்டம் இதுவாகும். இதற்கு முன்னதாக அவர், 2005ஆம், 2006ஆம், 2017ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...