Main Menu

மியான்மாரில் இடம்​பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!

மியான்மாரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த பலத்த மழையால் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில்  கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மண்சரிவில் சிக்கிய 28 பேரை பாதுகாப்பாக மீட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 25 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதனால் தாப்யோ கோன் கிராமத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலர் சிலர் மண்சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை தேடும் பணி நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...