Main Menu

மியன்மார் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி தலைநகர் நெய்பிடாவ்வில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு இளைஞன் மார்பிலும், மற்றொரு பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் இலக்காகினர்.

இதில் குறித்த பெண், ஆபத்தான நிலையில் இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இறந்த முதல் எதிர்ப்பாளராக அவர் மாறியுள்ளார்.

உயிரிழந்த பெண் 20 வயதான மியா த்வே த்வே கைங் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இழப்பு மிகவும் வருத்தமாக உள்ளதாக அவரது சகோதரர் யே ஹூட் ஆங் தெரிவித்துள்ளார்.

காயம் ஒரு உண்மையான குண்டிலிருந்து வந்தது. இது ரப்பர் குண்டு அல்ல என்று மருத்துவர் கூறிய போதிலும், பொலிஸ்துறையும் இராணுவமும் இதுகுறித்து மௌனம் காத்து வருகின்றது.

எனினும், தற்போது பொலிஸாரின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் மியன்மார் முழுவதும் போராட்டங்கள் தொடருகின்றன.

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக் கண்காணித்து வரும் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் (ஏஏபிபி) தெரிவித்துள்ளது.

பகிரவும்...