Main Menu

மாவீரர் நினைவு நாள் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது!

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள், தமிழர் தாயகத்திலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக  நேற்று (சனிக்கிழமை) நினைவுகூரப்பட்டனர்.

இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் வீடுகளிலும் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

நேற்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதன் பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 6.07 மணியளவில் தமிழர் தாயகப் பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் ஒரே நேரத்தில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

தமிழர் தாயகத்தில் பல  வருடங்களுக்கு பின்னர் நேற்று, மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

கிளிநொச்சி- கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களிலும் மன்னாரில் பெரியபண்டிவிரிச்சான், ஆட்காட்டி வெளி துயிலுமில்லங்களிலும் யாழ்ப்பாணத்தில் சாட்டி துயிலும் இல்லம், தீருவில் திடல், பருத்தித்துறை முனைப்பகுதி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்திலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கனகபுரம் துயிலுமில்லத்தில் பொதுமக்கள், மாவீரர்களின் பெற்றோர் உணர்வுடன் ஒன்று கூடி சுடர்களை ஏற்றினர்.

இதன்போது உறவுகளை இழந்தவர்கள், மதத் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...