Main Menu

மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல்

ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் வவுனியாவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு வவுனியா, தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்களினால் மெழுகுதிரி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது, வவுனியா மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத், தராக்கி சிவராம் தொடர்பான நினைவு சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் நினைவுகூரல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுகூரல் நிகழ்வு யாழில் இடம்பெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத் துறைக்காக உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில்வைத்து வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை, ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராகக் கடமையாற்றி வந்தவேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலம்பெற வேண்டியும், கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுவர வேண்டியும் பிரார்த்தனை இடம்பெற்றது.

பகிரவும்...