Main Menu

மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு ஓ.பி.எஸ் தலைமையை எடப்பாடி ஏற்கவேண்டும்- புகழேந்தி

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரதெருவில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளரான புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை. இதுஎன்ன காதல் கடிதமா வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவதற்கு. இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில்தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளார். எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடர்கின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அமைச்சகம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அனுப்பபட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டுள்ளனர். இது முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலே காரணம். திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தொடர்ந்தால் அ.தி.மு.கவில் ஒரு சேர்கூட மிச்சம் இருக்காது. சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விடுவார்கள். சசிகலா காலில் விழுந்ததால்தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக முடிந்தது. அவரைப்பற்றி பேசுவதற்கு எடப்பாடி தரப்பினருக்கு தகுதி கிடையாது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமாகும். எனவே அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு ஓ.பி.எஸ். தலைமையை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...