Main Menu

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்களுக்கு போலி சான்றிதழ்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்துறையில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு போலியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் படித்து வருகிறார்கள்.

இது தவிர தொலைதூர கல்வித்துறை சார்பில் நாடு முழுவதும் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக தொலைதூர கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது. இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை நடத்தினர். மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தொலைதூர கல்வி இயக்கக அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வி ஆண்டில் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளான 2013-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி பி.காம். பட்டப்படிப்புக்கு 321 மாணவர்கள் விண்ணப்பித்ததாக தெரிகிறது. மேலும் 253 மாணவர்கள் விண்ணப்பத்தில் எந்தவிதமான சுயகுறிப்புகளை தெரிவிக்காமல் தங்களது புகைப்படம் மற்றும் முகவரியை மட்டுமே குறிப்பிட்டு உள்ளனர்.

பல விண்ணப்பங்களில் மாணவரின் பெற்றோர், தொலைபேசி எண்கள், புகைப்படம், முகவரி உள்ளிட்ட எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பதாரரின் பெயர் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு படிப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பல மாணவர்கள் கல்வி கட்டணம்கூட செலுத்தவில்லை. 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் புரோவிசனல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் அவர்கள் தேர்வு கூட எழுதியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் முறைகேடாக போலியான சான்றிதழ்களை வழங்க தலா ரூ.1 லட்சம் வரை பணம் கைமாறியதாகவும் தெரியவந்துள்ளது. அதன்படி கோடிக்கணக்கில் பணம் கைமாறிய இந்த விவகாரத்தில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொலைதூர கல்வி இயக்ககத்தின் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜராஜன், கணினி பிரிவு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கார்த்திகைசெல்வன் ஆகிய 3 பேரிடமும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி உளளனர்.

கூடுதலாக சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால் மீண்டும் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் கட்ட விசாரணையில் கிடைத்துள்ள இந்த தகவல்களால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தனர்.

லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் யார்-யாருக்கு தொடர்பு? என்ற விவர பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கல்வி ஆண்டில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை தொலைதூர கல்வி இயக்ககத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பகிரவும்...