Main Menu

மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் – நாமல் ராஜபக்ஷ

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது.

மக்களாணையுடன் மீண்டும் பொதுஜன பெரமுனவின் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (07)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். 2019 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் கொவிட் பெருந்தொற்று தாக்குதல் பூகோள மட்டத்தில் தாக்கம் செலுத்தியது.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன்னுரிமை வழங்கினார்.

பூகோள பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல, வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் விரக்தி நிலையை ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளினால் தான் கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது.

அரகலயவின் பின்னணி என்ன என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள். இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டு பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்பது அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வகிப்பவர்களின் நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல என்றார்.

பகிரவும்...