Main Menu

போஸ்னியாவில் தற்காலிக குடியேற்ற முகாமில் தீ விபத்து!

வடமேற்கு போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள ஒரு தற்காலிக குடியேற்ற முகாமில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) முன்னாள் குடியிருப்பாளர்களால் முகாமில் தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலோர் முன்கூட்டியே அந்த இடத்தை காலி செய்ததாக கருதப்படுகிறது.

இந்த தீவிபத்தினால் எந்தவிதமான உயிரிழப்புகளும், யாருக்கும் காயங்களும் ஏற்படவில்லை. ஆனால், லிபா கிராமத்திற்கு அருகிலுள்ள தளத்தின் உட்கட்டமைப்பு அழிக்கப்பட்டது என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அலே சில்ஜெடிக் தெரிவித்தார்.

இதனால், கடுமையான குளிர்கால சூழ்நிலைகளுக்கு மத்தியில் குடியேறியவர்களில் ஏராளமானோர் தங்குமிடம் இல்லாமல் உள்ளனர்.

லிபா முகாமிலிருந்து வெளியேறும்போது வசிப்பவர்களுக்கு உணவு மற்றும் தூக்கப் பைகள் வழங்கப்பட்டன. சிலர் அருகிலுள்ள காட்டில் தற்காலிக முகாம்களை அமைத்தனர்.

லிபா முகாம் புதன்கிழமை மூடப்பட்டு வேறொரு இடத்திற்கு மாற்றப்பட இருந்தது. ஆனால் அதன் கூடாரங்களும் பிற வசதிகளும் தீயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதால் உடனடியாக அதை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த முகாம், வளங்கள் இல்லாததால் மனித உரிமைக் குழுக்களால் பொருத்தமற்றது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பகிரவும்...