Main Menu

போரால் குழந்தைகள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது- போப் பிரான்சிஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார். முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் போப் ஆண்டவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தார். சிறப்பு பிரார்த்தனையில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்துக்குள் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேவாலயத்துக்கு வெளியே 4 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். குழந்தை இயேசு சொரூபத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் முத்தமிட்டார். அவர் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார். பாடல்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் அவர் பேசியதாவது:- நன் உலகில் உள்ள ஆண்களும், பெண்களும், செல்வம் மற்றும் அதிகாரத்திற்கான பசியில் தங்கள் அண்டை வீட்டாரையும் தங்கள் சகோதர-சகோதரிகளையும் கூட சுரண்ட பார்க்கின்றனர். எத்தனை போர்களை மனிதர்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். இன்று கூட பல இடங்களில் மனித கண்ணியமும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகின்றன. எப்போதும் போல இந்த மனித பேராசையால் பாதிக்கப்படுபவர்கள். பலவீனமானவர்கள் மற்றும் பாதிக்கக்கூடிய சூழலில் உள்ளவர்தான். எல்லாவற்றுக்கும் மேலாக போர், ஏழ்மை, அநீதி ஆகியவற்றால் குழந்தைகள் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை நினைத்து கவலை கொள்கிறேன். பணம், அதிகாரம் மற்றும் இன்பத்திற்காக ஏங்கி கொண்டிருக்கும் உலகம். சிறியவர்களுக்கு, பிறருக்காக, ஏழை, மறுக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு இடமளிக்காது. தொழுவத்தில் பிறந்த குழந்தை இயேசுவுக்கும் ஏழ்மைக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது. இயேசு கிறிஸ்து ஏழையாக பிறந்தார். ஏழையாக வாழ்ந்தார். ஏழையாகவே உயிர் துறந்தார். எனவே பிறருக்கு நல்லதை செய்யாமல் யாரும் இந்த கிறிஸ்துமசை கடந்து செல்ல வேண்டாம். யாரும் பயம், ஊக்கமின்மையை தங்கள் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...