Main Menu

பைடனுடன் பிரதமர் பொரிஸ் கலந்துரையாடல்: முக்கிய விடயங்களில் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

அத்துடன், காலநிலை தொடர்பான பரிஸ் ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் இணைகின்றது என்ற பைடனின் அறிவிப்புகளை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர், முதலாவது தொலைபேசி உரையாடலின்போதே பிரதமரால் இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

ஜோ பைடனுடன் பேசியது மிகவும் நல்லது என்றும் கொவிட்-19 தொற்றிலிருந்து நிலையாக மீள்வதற்கு இரு நாடுகளின் கூட்டிணைவை எதிர்பார்த்துள்ளதாகவும் பொரிஸ் ஜோன்சன் தனது ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பைடன் மற்றும் ஜோன்சன் ஆகியோர் காலநிலை மாற்றத்தைத் தடுப்பது மற்றும் கொவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவது குறித்து பலதரப்பு அமைப்புகள் மூலம் இணைந்து செயற்படுவது பற்றிப் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அத்துடன், சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பகிரப்பட்ட வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்து ஒருங்கிணைப்பின் அவசியம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜோ பைடன் பதவியேற்று, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகன் ஜனாதிபதி அன்ட்ரெஸ் மனுவெல் லோபஸ் ஒப்ரடோர் (Andres Manuel Lopez Obrador) ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்த நிலையில் தற்போது பிரித்தானிய பிரதமருடனும் உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...