Main Menu

பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழப்பு

தெற்கு பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள சிறிய நகரமான ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாரம்பரிய அணிவகுப்பில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த டசன் கணக்கான மக்கள் மீது கார் அதிவேகமாகச் சென்று மோதியது.

இந்த விபத்தின் போது, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக நகர மேயர் ஜாக் கோபர்ட் தெரிவித்தார்.

கார் ஊர்வலத்துக்குள் புகும் முன் அந்த காரை பொலிஸார் விரட்டி வந்ததாகவும், பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க காரை அதிவேகத்தில் ஓட்டியதால் இந்த விபரீதம் நேர்ந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விபத்துக்கு பின் காருடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற நபரை பொலிஸார், கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் தினத்துக்கு முன்பாக ‘கார்னிவல்’ திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக கார்னிவல் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் பெல்ஜியத்தில் நேற்று கார்னிவல்’ திருவிழா கொண்டாடப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்க நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர்.

அவர்கள் அலங்கார ஆடைகளை அணிந்தும், மாறு வேடங்கள் தரித்தும் ஆடி, பாடியபடி ஊர்வலமாக சென்றனர். இதன்போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பகிரவும்...