Main Menu

பிறப்பதற்கு முன்பே குழந்தையை இழந்துள்ள சோகம்

மருத்துவர்களின் கவனயீனம் காரணமாக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், குழந்தையை இழந்துள்ள சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் அம்பாந்தோட்டை காவல்துறை மற்றும் மருத்துவமனையின் பணிப்பாளரிமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

32 வயதான குறித்த பெண் குடாபோலன பகுதியை சேர்ந்தவர் ஆகும்.

அவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில், அம்பாந்தோட்டை மருத்துமனையின் விசேட மருத்துவர் ஒருவரிடம் தனியார் சேவையில் ஆலோசனைகளை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய குறித்த பெண் பிரசவித்திற்காக கடந்த 5 ஆம் திகதி அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அன்றைய நாளில் இருந்து இன்று காலை வரை குறித்த மருத்துவமனையில் கடமையாற்றிய அந்த மருத்துவர் அவரை பரிசோதனை செய்யவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அந்த பெண் குழந்தையை பிரசவித்த போதும், அது உயிரிழந்து காணப்பட்டது.

தனது குழந்தையை இழந்த மனவேதனையுடன் அந்த பெண் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

மருத்துவரின் கவனயீனத்தால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி குழந்தையின் தந்தை, அம்பாந்தோட்டை காவல்துறையிலும், மருத்துவமனை பணிப்பாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

பகிரவும்...