Main Menu

பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா, கிவிட்டோவா, பிளிஸ்கோவா, பிரெடி ஆகியோர் வெற்றி!

பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர் தற்போது அவுஸ்ரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பெண்களுக்காக நடத்தப்பட்டுவரும் இத்தொடர், ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக நடத்தப்படுவதால் இத்தொடரில் வீராங்கனைகள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்துவரும் இத்தொடரில் தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சில போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்.

இதில் இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும், அமெரிக்காவின் சோபியா கெனின்னும் மோதிக் கொண்டனர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-7, 6-3, 6-1 என்ற செட் கணக்குகளில் நவோமி ஒசாகா வெற்றிபெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
………….
இன்னொரு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவும், ரஷ்யாவின் லுட்மில்லா சாம்சோனோவாவும் மோதிக் கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் பெட்ரா கிவிட்டோவா வெற்றிபெற்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
…………
மற்றொரு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், செக் குடியரசின் கரோலின் பிளிஸ்கோவா, அவுஸ்ரேலியாவின் அஜ்லா டோம்ல்ஜானோவிக்கை எதிர்கொண்டார்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், கரோலின் பிளிஸ்கோவா, 6-4, 7-6, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
………….
இன்னொரு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும், அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடியும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களின் உச்சகட்ட விறுவிறுப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஜெனீபர் பிரெடி 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார்.

இந்த தோல்வியுடன் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி, ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறினார்.

பகிரவும்...