Main Menu

பிரிஸ்டலில் நிறுவப் பட்டிருந்த எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை நீரில் தூக்கி வீசப்பட்டது!

தென்மேற்கு இங்கிலாந்து துறைமுக நகரமான பிரிஸ்டலில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒரு முக்கிய வணிகரின் சிலையை கவிழ்த்து, துறைமுக நீரிணை பகுதியில் வீசியுள்ளனர்.

அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலையையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள், கயிற்றால் கட்டி, அதைச் சுற்றியுள்ள கூட்டத்தினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கவிழ்த்தனர்.

1636இல் பிறந்த கோல்ஸ்டன், பிரிஸ்டலில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். ஜான் காசிடி வடிவமைத்த கோல்ஸ்டனின் சிலை, 1895ஆம் ஆண்டில் பிரிஸ்டலின் மையத்தில் அமைக்கப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்த சிலை அகற்றப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட கோல்ஸ்டனின் சிலை ஒரு அவமானகரமான நினைவுச்சின்னமாக விவரிக்கப்படுகிறது.

லண்டனில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் திரண்டனர். அதே போல் பிரித்தானியா முழுவதும் பிரிஸ்டல், மன்செஸ்டர், வால்வர்ஹாம்டன், நாட்டிங்ஹாம், கிளாஸ்கோ மற்றும் எடின்பர்க் உள்ளிட்ட நகரங்களிலும் திரண்டனர்.

தெற்கு லண்டனின் வோக்ஸ்ஹாலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டங்களின் போது லண்டனில் 12பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், எட்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.

பகிரவும்...