Main Menu

பிரித்தானியா இரட்டை வேடம் போடுவதாக பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

தமது நாட்டு இராணுவ வீரர்களை, எந்தவொரு யுத்தக் குற்ற நீதிமன்றங்களிலும் நிறுத்தப் போவதில்லையெனக் கூறும் பிரித்தானியா, எமது நாட்டு இராணுவ வீரர்கள் குறித்து ஏன் சிந்திப்பதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக, நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைதிப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரேமநாத் சி தொலவத்த மேலும் கூறியுள்ளதாவது, “எமது நாட்டுக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் புதிய யோசனையொன்று  முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானிய இராணுவத்தினர் தொடர்பாக  சிந்திப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடையும் அதேவேளை,  யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்கள், இலங்கையின் இறையாண்மை குறித்து பிரித்தானியா ஏன் சிந்திப்பதில்லை.

யுத்தம் தொடர்பான தகவல்கள் அவர்களுக்கு தெரியாதெனக் கூற முடியாது. அனைத்து விடயங்களையும் தெரிந்துக்கொண்டு, தமது இலாபத்துக்காகச் செயற்படுவதாகவே எமக்கு தோன்றுகின்றது.

மேலும் அவர்கள், இலங்கையில் இடம்பெற்றதை யுத்தமெனக் கூறாது, இனப்பிரச்சினைக்கான போராட்டம் என்றே அடையாளப்படுத்துகின்றனர்.

பிரித்தானியா கூறுவதைப் போன்று, வர்க்க ரீதியான, இனரீதியான போராட்டம் ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை. பயங்கரவாத அமைப்பொன்றை யுத்த ரீதியாகத் தோற்கடித்த யுத்தம் ஒன்றே இலங்கையில் நடைபெற்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...