Main Menu

பிரித்தானியாவும், தேசிய அளவிலான இரண்டாவது புதிய முடக்கத்திற்கு செல்கிறது?

எதிர்வரும் வியாழக்கிழமை 5 ஆம் திகதி  முதல், 4 வார காலத்திற்கு இரண்டாவதும் புதியதுமான, தேசிய அளவிலான முடக்கம், பிரித்தானியாவில் நடைமுறையில் இருக்கும்  என  பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இதன்படி பப்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள், பொழுது போக்கு நிலையங்கள், எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி முதல்,   எதிர்வரும் டிசம்பர் 2 புதன்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உணவகங்களில் இருந்து உணவை எடுத்துச் செல்லுதல் மற்றும்  விநியோகித்தலை தொடரமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ள அதேவேளை குடும்ப உறுப்பினர்களைத் தவிர்ந்த எவரும் வீடுகளில் ஒன்று கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் வீட்டுக்கு வெளியே குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவரை சந்திக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை  பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் கட்டுமானத் தொழில்கள்  தொடர்ச்சியாக இயங்குவதற்கும்,  உயர்மட்ட அளவிலான  விளையாட்டுகளை தொடர்வதற்கும்,  வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத அத்தியாவசிய தொழில்சார் நடவடிக்கைகள் உள்ளிட்ட பணியிடங்கள் தொழிற்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தொழில் சார்ந்த அத்தியாவசிய பயணங்கள் தவிர்ந்த அனைத்து சர்வதேசப் பயணங்களும் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேர்லோ திட்டம் (furlough scheme) எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

பகிரவும்...