Main Menu

பிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி

பிரிட்டனில் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்த நினைத்த பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியை எம்பிக்கள் முறியடித்தனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.  இதனால் பிரிட்டன் வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதா மீது பாராளுமன்ற பொது அவையில் கடந்த 4-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி கொண்டு வந்த இந்த மசோதாவுக்கு ஆதரவாக 327 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் கிடைத்தன.

இதன்மூலம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை, எம்.பி.க்கள் தோற்கடித்தனர். இந்த மசோதாவிற்கு மேல்சபையும் ஒப்புதல் அளித்தது. எனவே, பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 3 மாத கால அவகாசம் கேட்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே, அதாவது அக்டோபர் 15-ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

இந்நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பான தீர்மானம் நேற்று மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதிலும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தீர்மானம் வெற்றி பெற 434 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 293 பேர் மட்டுமே ஆதரவு அளித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இந்த நிகழ்வுடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தை முடக்க ராணி ஒப்புதல் அளித்திருப்பதால், 6 வாரங்களுக்கு அதாவது அக்டோபர் 14-ம் தேதி வரை எம்பிக்கள் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது. கடைசியாக வழங்கப்பட்ட கால அவகாசத்தின்படி அக்டோபர் 31-ம் தேதியுடன் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...