Main Menu

பிரதமர் பதவியை பெறுவதாயின் தமிழ் கட்சிகளின் ஆதரவை சுமந்திரன் பெற வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வாராயின், அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.

அவரால் அது முடியாதுபோனால், சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

ஆகவே ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் இந்த மூன்று பேருக்கு மட்டுமே உள்ளது.

புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்த பயனும் கிடையாது.

எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது என்பதை விட எங்களிடம் என்ன கொள்கைகள் என்ன மாதிரியான விடயங்களை முன்வைத்து நாம் அரசாங்கத்தை அமைக்க போகின்றோம் என்பதே முக்கியம்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உத்தியோகபூர்வமல்லாத வகையில் சுமந்திரனை பிரதமராக நியமிக்கலாம் என்று அணுகியநிலையில், அதை எல்லா கட்சிகளும் இணைந்து அழைத்தால் தான் அந்த பதவியை ஏற்க முடியும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார் என எனக்கு அறியக்கிடைத்தது.

சுமந்திரனை பிரதமராக அழைத்து என்றால் உண்மையிலேயே நான் சந்தோஷம் அடைவேன்.
ஆனால், சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும்.

அவர் தன்னுடைய கட்சியினுடைய ஏகோபித்த விருப்பிலா அல்லது தன்னுடைய தனிப்பட்ட விருப்பிலா இந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார் எனும் கேள்வியும் எழுகின்றது.

அத்தோடு, தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்றதன் பிற்பாடு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், தாங்கள் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எந்த நேரமும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வேலையைச் செய்யும்போது மத்திய அரசாங்கத்தினுடைய விருப்பு, இநத விடயங்களில் தாக்கம் செலுத்துவதால் தமிழ் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை மறந்து விடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்றதன் பின்னர் அமிர்தலிங்கத்தின் வாழ்வில் பல முரண்பாடுகள் ஏற்பட்டது. சம்பந்தனும் அது போலவே செயற்பட்டார்.

சுமந்திரன் இவ்வாறு பதவி ஏற்றுக்கொள்வதானால் தமிழ் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த விருப்பை பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கின்றேன் என்று தெரிவித்தார்.

பகிரவும்...