Main Menu

பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உட்துறை அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

குறித்த அறிவிப்பில், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தால் பொலிஸார் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பொலிஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய தாமதித்தாலோ அல்லது மறுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை பொலிஸார் இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதுடன் வழக்குகளின் நிலைவரம், விசாரணை விபரங்களை மத்திய உட்துறை அமைச்சகத்தின் ஐ.டி.எஸ்.எஸ்.ஏ. இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இவ்வாறு பதிவேற்றப்பட்ட விசாரணை நிலைவரங்கள் கண்காணிக்கப்படும்.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகள் சி.ஆர்.பி.சி. பிரிவு 164இன் கீழ் குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் பதிவுபெற்ற அரச மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் குறிப்பாக, பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்தும் பொலிஸார் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய உட்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...