Main Menu

பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படைக்கு உத்தரவு

ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைவரை அமெரிக்கா கொன்றதை அடுத்து, பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படை போர்க்கப்பல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்கு ஈரான் பழிவாங்கும் என்ற அச்சத்தின் மத்தியில் கப்பல்களையும் மக்களையும் பாதுகாக்க இந்த நடவடிக்கை உதவும் என்று பாதுகாப்பு செயலாளர் பென் வோலஸ் கூறினார்.

இதேவேளை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 12 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இங்கிலாந்து திரும்பவுள்ளார் என்றும் அதன் பின்னர் எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் பாக்தாத்தில் இந்த வாரம் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈரானிய ஆதரவு ஈராக் போராளித் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனால் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற அச்சம் காணப்படுகின்றது.

இருப்பினும் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் சுமார் 52 இடங்களில் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...