Main Menu

பாப்பரசர் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கவில்லை – வத்திக்கான் மறுப்பு

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து தெரிவித்த கருத்து நோக்கத்துக்கு புறம்பாக பேசுபொருளாக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

ரஸ்யாவை பிறப்பிடமாக கொண்ட இயக்குனர், இவெக்னி அஃபினீவெஸ்கி (Evgeny Afineevsky) தயாரித்த “பிரான்செஸ்க்கோ” எனும் ஆவணத் திரைப்படத்தில் ஒருபால் சேர்க்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பரிசுத்த பாப்பரசர், ஓரினச் சேர்க்கையாளர்களும் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான உரிமைகளை கொண்டவர்களே. அவர்களும் கடவுளுடைய பிள்ளைகள். யாரும் அவர்களை தூக்கி எறியவோ அவர்கள் மட்டில் பரிதாபப்படவோ கூடாது என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தானது பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 30ம் திகதி வத்திக்கான் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு முன்னர் ஆவணப் படத்துக்காக பரிசுத்த பாப்பரசர் இருவேறு நேரங்களில் இருவேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்ததாகவும் அவை மீள் தொகுப்பு செய்யப்பட்டு, சரியான சூழல்மயப்படுத்தல் நெறிமுறைகள் இல்லாமல் ஒற்றை பதிலாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கருத்தில் பரிசுத்த பாப்பரசர், ஓரின சேர்க்கையாளர்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்தே கருத்து தெரிவித்ததாகவும் ஓரின சேர்க்கையாளர்களின் இணைவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரான்செஸ்க்கோ’ ஆவணப்படம் கடந்த ஒக்டோபர் மாதம் 21ம் திகதி ‘ரோம் திரைப்படத் திருவிழா’வில் (Rome Film Festival) திரையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...