Main Menu

பாகிஸ்தான் பிரதமருடனான முஸ்லிம் தலைவர்களின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹலியா ரம்புக்வெல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

அரசியல் ரீதியான காரணங்களுக்காக இந்த சந்திப்புக்களை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கவில்லையென்றும் ​​இந்த முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் வருகை தொடர்பான முடிவுகள் இரு நாடுகளிலிருந்தும் அரசியல் ஆலோசனைக் குழுக்களால் எடுக்கப்படுகின்றன என்றும் அதில் அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல்ல கூறினார்.

வருகை தரும் பிரமுகர் மற்றும் கூட்டங்களுக்கு முன்மொழியப்பட்ட இடங்கள் தொடர்பான பாதுகாப்பின் அடிப்படையில் பெரும்பாலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம் மற்றும் பதியுதீன் ஆகியோருடனான கலந்துரையாடல்கள் மட்டுமல்லாமல், விளையாட்டு வளாகத்திற்கு வருகை தரும் நிகழ்வும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...