Main Menu

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை தனியாக எதிர்கொள்ளாமல்  உலக நாடுகள் அனைத்தும்  ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜி – 20 நாடுகள் அமைப்பின் 15வது மாநாடு மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது.

இதில் காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக கொரோனா வைரஸ் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்  இந்த கொரோனா தொற்றுதான்.

நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனா பாதிப்பை தடுக்க முடியும். பொருளாதார மீட்சிக்கு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு வர்த்தகம் ஆகியவற்றை மீட்பதற்காகவும் ஜி – 20 நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பூமியை பாதுகாக்கும் நோக்கில் நாடுகளின் தலைவர்களாக இருக்கும் நாம் தான் எதிர்கால மனிதகுலத்துக்கு அறங்காவலர்கள்.

பருவ நிலை மாற்றம் பற்றி நாம் கவலைப்படுகிறோம். இந்த சவாலை தனியாக எதிர்கொள்ளாமல் உலக நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும். பருவ நிலை மாற்றம் தொடர்பான பெரிஸ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளதை விட  இந்தியா அதிகமான பணிகளைச் செய்துள்ளது.

தொழிலாளர்களை வெறும் உற்பத்தி சக்தியாக பார்க்காமல்  அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையும் முன்னேற வேண்டும். அப்போதுதான்  உலகம் உண்மையான வளர்ச்சியுறும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...